அமெரிக்காவின் ஒயிட் ஹவுஸ் செய்தித் தொடர்பாளர் கேரோலின் லெவிட் தனது மகளின் பிறப்பை சமூக வலைதளத்தில் கொண்டாடிய நிலையில், ஈரான் அதற்குத் தெரிவித்த கடும் கண்டனம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஒயிட் ஹவுஸ் வரலாற்றிலேயே மிக இளவயது செய்தித் தொடர்பாளரான கேரோலின் லெவிட், கடந்த மே 1-ஆம் தேதி தனக்கு பெண் குழந்தை பிறந்த செய்தியை நேற்று முன்தினம் ‘எக்ஸ்’ (X) தளத்தில் பகிர்ந்தார். தனது மகளுக்கு ‘விவியானா’ (Viviana) என்று பெயரிட்டுள்ளதாகவும், அந்த தேவதை தங்கள் குடும்பத்திற்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொண்டு வந்துள்ளதாகவும் பதிவிட்டிருந்தார்.

லெவிட்டின் இந்தப் பதிவை மறுபதிவு செய்த ஆர்மீனியாவிற்கான ஈரான் தூதரகம், வாழ்த்துகளுடன் ஒரு கசப்பான உண்மையையும் சுட்டிக்காட்டியுள்ளது. வாழ்த்துகள்! குழந்தைகள் எப்போதும் அப்பாவித்தனமானவர்கள். ஆனால், உங்களது தலைவர் (டிரம்ப்) ஈரானின் மினாப் -பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் மீது நடத்திய தாக்குதலில் 168 குழந்தைகள் கொல்லப்பட்டார்களே.. அவர்களும் குழந்தைகள்தானே? அவர்களைக் கொன்றதை நீங்கள் நியாயப்படுத்தினீர்கள். இப்போது உங்கள் குழந்தையை முத்தமிடும்போது, அந்த 168 குழந்தைகளின் தாய்மார்களை நினைத்துப் பாருங்கள்,” என ஈரான் பதிவிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 20, 2026 அன்று ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் படைகளுக்கு இடையே மோதல் வெடித்தது. அப்போது ஈரானின் மினாப் பகுதியில் உள்ள ஒரு பள்ளி தாக்குதலுக்குள்ளானது. இதில் 5 முதல் 12 வயதுக்குட்பட்ட 160-க்கும் மேற்பட்ட பள்ளிச் சிறுமிகள் கொல்லப்பட்டதாக ஈரான் குற்றம் சாட்டியிருந்தது. லெவிட் அப்போது அந்தத் தாக்குதலை அமெரிக்காவின் தற்காப்பு நடவடிக்கை என நியாயப்படுத்தியதாக ஈரான் தற்போது சுட்டிக்காட்டியுள்ளது.