கார்ப்பரேட் நிறுவனங்களின் வேலை கலாச்சாரம் மற்றும் ஊழியர்களின் பணி-வாழ்க்கை சமநிலை குறித்து ஐஐடி முன்னாள் மாணவர் ஒருவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள கருத்து, தற்சமயம் ஊழியர்களிடையே பெரும் விவாதத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. கிரீதக்யா நய்யார் என்ற அந்த இளைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “தங்களை ஒரு ‘குடும்பம்’ என்று அழைத்துக் கொள்ளும் நிறுவனங்களைப் பார்த்து ஊழியர்கள் ஒருபோதும் ஈர்க்கப்படக் கூடாது மாறாக, அலுவலகத்திற்கு வெளியே ஊழியர்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட குடும்பம் இருப்பதை உணர்ந்து, அவர்களின் சொந்த நேரத்தை மதிக்கும் நிறுவனங்களில்தான் மக்கள் பணியாற்ற வேண்டும். இதுவே நான் கேட்டதிலேயே மிகச்சிறந்த கார்ப்பரேட் அறிவுரை” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ ‘மிகச்சிறந்த ஒற்றை வரி கார்ப்பரேட் அறிவுரை’ என்ற தலைப்புடன் இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
View this post on Instagram
நீண்ட வேலை நேரம், வார இறுதி நாட்களிலும் வரும் அலுவல்முறை அழைப்புகள் மற்றும் அலுவலக நேரத்தைத் தாண்டியும் வேலை செய்ய வேண்டும் என்ற அழுத்தங்களை எதிர்கொள்ளும் பல கார்ப்பரேட் ஊழியர்களிடையே இக்கருத்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவின் கீழ் கருத்து தெரிவித்துள்ள பயனர் ஒருவர், “திட்டங்களைச் செயல்படுத்தும் நேரத்தில் ஊழியர்களுக்குக் குடும்பம் இருப்பதை நிறுவனங்கள் மறந்துவிடுகின்றன என்று தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
மற்றொருவரோ, “இதுபோன்று ஊழியர்களின் குடும்ப நேரத்தை மதிக்கும் 5 முதல் 10 நிறுவனங்களின் பெயர்களைப் பட்டியலிட்டால் அது பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில், கார்ப்பரேட் குழுக்கள் என்பவை விளையாட்டு அணிகளைப் போன்றவையே தவிர, அவை குடும்பங்கள் அல்ல என்றும், தங்களது நிறுவனங்களில் இந்த கலாச்சாரம் சிறப்பாகப் பின்பற்றப்படுவதாகவும் வேறு சிலர் தங்களது நேர்மறையான அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர்.
