தேனி மாவட்டம் ஓடைப்பட்டி அருகே உள்ள மூர்த்திநாயக்கன்பட்டி ராமர் கோயில் தெருவைச் சேர்ந்த சிரஞ்சீவி மற்றும் அவரது மைத்துனர் ஜெகதீஸ், தங்களது உறவுக்காரர் பவித்ராவுக்கு அரசு வேலை கிடைப்பதற்காக வத்தலக்குண்டுவைச் சேர்ந்த சூரஜ் (29) என்பவரிடம் மொத்தம் ரூ.88,02,916 பணத்தை அனுப்பியுள்ளனர்.

சூரஜ், தனது பழக்க வழக்கங்களால் பலருக்கு அரசு வேலை வாங்கித் தந்த அனுபவம் உண்டென கூறி, கடந்த 2023 நவம்பர் மாதம் முதல் பல தவணைகளில் பணம் வாங்கியுள்ளார்.

மேலும், கோயம்புத்தூர் அரசு பள்ளியில் பணியிடம் கிடைத்ததாக பொய்யான நியமன ஆணையின் நகலை வாட்ஸ்அப்பில் அனுப்பியும், மாறுதல் காரணமாக மேலும் பணம் தேவை என கூறியும், மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த மோசடியால் ஆத்திரமடைந்த சிரஞ்சீவி, மார்ச் 17 அன்று தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், தலைமறைவான சூரஜை நேற்று கைது செய்துள்ளனர்.