உக்ரைன்  நாட்டின் மீது ரஷ்யா தொடுத்து வரும் போரானது சில வாரங்களில் ஒரு வருடத்தை நெருங்க உள்ளது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் சிதைந்து போய் உள்ளது. அதேசமயம் இந்த போரினால் ரஷ்யாவும் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் இந்த போரில் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் இந்த போரில் இருந்து பின்வாங்காத ரஷ்யா தொடர்ந்து வீரர்களை அணிதிரட்டி போர்முனைக்கு அனுப்பி கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தனது அமைச்சக அதிகாரிகளுடன் உக்ரைன் நாட்டின் உள்துறை மந்திரி டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி இன்று ஹெலிகாப்டரில் சென்றுள்ளார். இதனையடுத்து தலைநகர் கீவ் நகருக்கு 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ப்ரோவெரி பகுதிக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த மழலையர் பள்ளி அருகே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உள்துறை மந்திரி, உள்துறை இணை அமைச்சர் மற்றும் அமைச்சக அதிகாரிகள் பள்ளி குழந்தைகள் என மொத்தம் 16 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.