ஈரோடு கிழக்கு தொகுதியில் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. அதிமுக, திமுக, காங்கிரஸ் என தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் வேட்பாளர் தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நிற்கும் நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் இபிஎஸ் தரப்பில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு 40 நட்சத்திர பேச்சாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமின்றி அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி இலக்கு நிர்ணயித்துள்ளாராம்.

இதன் மூலம் தன்னுடைய செல்வாக்கை அதிமுகவில் நிருபித்து நிரந்தர பொது செயலாளர் ஆக மாறிவிடலாம் என எடப்பாடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் பல கட்ட ஆலோசனைகள் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதன் பிறகு மற்ற கட்சியில் அதிருப்தியில் இருப்பவர்களை தங்கள் கட்சியில் இழுக்க வேண்டும் எனவும் எடப்பாடி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வேலைகளை கட்சியினர் சரியாக செய்கிறார்களா என்பதை கண்காணிக்க மேற்கு மண்டல எம்எல்ஏ ஒருவரை எடப்பாடி ரகசியமாக ஸ்பை வேலைக்காக நியமித்துள்ளாராம். இதனால் கட்சியினர் எல்லாம் உஷாராகி எடப்பாடி பழனிச்சாமி சொன்ன வேலையை தீவிரமாக செய்து வருகிறார்களாம். மேலும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவடைந்த பிறகு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் என்பதால் அதிமுக யாருக்கு சொந்தம் என்பது தீர்ப்புக்குப் பிறகு தான் தெரியும் என்பதால் அதிகாரம் யார் வசம் வேண்டுமானாலும் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.