ஈரோடு கிழக்கு  தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வருகிற 31-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. ஆனால் இப்போதே பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இங்கு ஈரோடு மாவட்டம் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் அரசியல் கட்சியினர் குவிந்து வருகின்றனர். தேர்தல் வரை இங்கேயே தங்கி இருக்க முடிவு செய்துள்ளனர். அதன் காரணமாக  தேர்தல் முடியும் வரை வீட்டின் வசதியை பொறுத்து வாடகை ரூ.10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையிலும், பங்களா தோற்றம் இருந்தால் ஒரு லட்சம் வரையும் வீட்டு உரிமையாளர்கள் கேட்கின்றனர். ஆனால் தங்கும் விடுதிகள் ஹோட்டல்களில் தங்கினால் போலீசார் மற்றும் பறக்கும் படை சோதனை ஏற்படும் என அச்சமடைந்து அமைச்சர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் வாடகை அதிகம் என்றாலும் கூட வீடுகளில் தாங்குவதையே விரும்பி வருகின்றனர்.

அந்த வகையில் தி.மு.க, அ.தி.மு.க கட்சிகள் ஈரோடு நகர் பகுதியில் வீடுகள் பங்களாக்களை வாடகைக்கு பிடித்து விட்டதால் தே.மு.தி.க உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஈரோடு நகரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிற்கு சோலார், கஸ்பா, பேட்டை, ரங்கா பாளையம், திண்டல் போன்ற புறநகர் பகுதிகளில் வீடுகளை தேடி வருகின்றனர். அதேபோல் அசைவ ஹோட்டல்கள், டாஸ்மாக் கடை, சைவ ஹோட்டல் மற்றும் போன்ற இடங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இங்கு ரூ.200, ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் புழக்கம் அதிகரித்து காணப்படுகிறது. டீக்கடைக்காரர்கள் சில்லறை கொடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். சிலர் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என சில்லறை வாங்காமலேயே சென்று விடுகின்றனர்.

தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க கட்சி வேட்பாளர்கள் அறிவித்துள்ளனர். ஆனால் அ.தி.மு.க என்னும் வேட்பாளர் அறிவிக்கவில்லை. இந்நிலையில் தகவல்களை பகிரிந்து கொள்ள வேட்பாளர்கள் தங்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் ஊடகங்களுக்கு தனித்தனியே வாட்ஸ் அப் குழுக்களை ஆரம்பித்துள்ளனர். இந்த இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு கௌரவ பிரச்சினையாகவும், அதே சமயம் அ.தி.மு.க-விற்கு வலிமையை நிரூபிக்கும் பலமாகவும் இருக்கின்ற காரணத்தினால் தேர்தல் களம் தீவிரமடைந்துள்ளது. மேலும் தி.மு.க வை பொருத்தவரை மாவட்ட அமைச்சரான சோ முத்துசாமி ஈரோட்டிலேயே முகாமிட்டுள்ளார். அது தவிர கே.என்.நேரு, ஏ.வ.வேலு உட்பட யாராவது ஒரு அமைச்சர் தினம் தோறும் தொகுதிக்கு வந்து செல்கின்றனர். அதிமுகவில் அனைத்து எம்.எல்.ஏ-க்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் ஈரோட்டில் முகாமிட்டுள்ளனர். தேர்தல் பிரச்சாரம் 10 சதவீதம் அளவு கூட தொடங்காத நிலையில் தற்போது ஈரோடு நகரம் கரைவேட்டி தலைவர்கள், தொண்டர்களால் தினறி வருகிறது.