ஈரானுடன் அமெரிக்கா மேற்கொண்டு வரும் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளையும் அமைதி முயற்சிகளையும் முடக்க, இஸ்ரேல் அரசாங்கத்திற்குள் இருக்கும் சில சக்திகள் தீவிரமாக முயன்று வருவதாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில் பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், மத்திய கிழக்கு பகுதியில் அமைதி ஏற்பட்டுவிடக் கூடாது என்றும், அங்கு போர் எப்போதும் தடையின்றி நீடிக்க வேண்டும் என்றுமே இந்த இஸ்ரேலிய சக்திகள் விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுடனான சமாதான பேச்சுவார்த்தைகளில் இருந்து அமெரிக்காவை எப்படியாவது விலக்கி வைக்க வேண்டும் என்பதற்காக, இஸ்ரேல் அரசுக்குள் இருக்கும் சில நபர்கள் பின்னணியில் தொடர்ந்து வேலை செய்து வருவது எனக்கு உறுதியாகத் தெரியும் என்றும் அவர் அதிரடி தகவலைப் பகிர்ந்துள்ளார்.
வெளிநாட்டு அரசாங்கங்கள் தங்களது சொந்த லாபத்திற்காகவும் நலன்களுக்காகவும், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளை தங்களுக்குச் சாதகமாக மாற்றியமைக்க முயல்வது உலக அரசியலில் சாதாரணமான ஒன்றுதான் என்று ஜே.டி. வேன்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், அமெரிக்காவை வழிநடத்தும் தலைவர்கள் இத்தகைய வெளிப்புற அழுத்தங்களுக்கும் சதிகளுக்கும் எளிதாக அடிபணிந்து, நாட்டின் உரிமையை இழக்கும்போதுதான் உண்மையான பிரச்சனை ஆரம்பமாகிறது என்று எச்சரித்த அவர், அமெரிக்கா எப்போதும் தனது சொந்த நலன்களின் அடிப்படையிலேயே தனித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அதே சமயம், தனது இந்த விமர்சனம் ஒட்டுமொத்த இஸ்ரேல் அரசாங்கத்திற்கும் எதிரானது அல்ல என்பதையும் வான்ஸ் தெளிவுபடுத்தியுள்ளார். இஸ்ரேல் அரசுக்குள் இருக்கும் சில குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே இத்தகைய முட்டுக்கட்டைகளை ஏற்படுத்துகிறார்கள் என்று குறிப்பிட்ட அவர், கடந்த காலங்களில் ஈரானுக்கு எதிராகக் கடுமையான ராணுவக் கட்டுப்பாடுகளையும் பொருளாதாரத் தடைகளையும் டிரம்ப் விதித்ததற்கு இஸ்ரேல் காரணம் அல்ல என்றும், அது முற்றிலும் அமெரிக்காவின் சொந்த முடிவே என்றும் தனது உரையில் விளக்கம் அளித்துள்ளார்.
துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் இந்த அரசியல் கருத்துக்கள் ஒருபுறமிருக்க, மறுபுறம் ஈரான் மீதான ராணுவத் தாக்குதலை அமெரிக்கா அதிரடியாகத் தீவிரப்படுத்தியுள்ளது. நேற்று ஈரானில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சிகிச்சை பெற்று வரும் ஒரு முக்கிய மருத்துவமனைக்கு அருகே அமெரிக்கா பயங்கரத் தாக்குதலை நடத்தியுள்ளது. இத்தாக்குதலைத் தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்து நூற்றுக்கணக்கானோர் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுமட்டுமின்றி, ஈரானின் எல்லைப் பாதுகாப்பில் மிக முக்கியப் பகுதியாகவும், அவர்களால் ‘சிவப்புக் கோடு’ என்றும் அறிவிக்கப்பட்டுள்ள ஹார்முஸ் ஜலசந்தி வழியே ஈரான் நோக்கிச் சென்ற கப்பல் ஒன்றின் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்து, உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது.
