அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், இன்று (நவம்பர் 1) ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அ.தி.மு.க.வின் தொடர் தோல்விகளுக்கு மறைமுகமாகக் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையே (இ.பி.எஸ்.) அவர் குற்றம் சாட்டினார்.

“எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா காலத்தில் ஒருபோதும் தோல்வியைச் சந்திக்காத இயக்கம் (அ.தி.மு.க.), எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு 2019, 2021, 2024 என தொடர்ச்சியாகத் தோல்வியைச் சந்தித்தது” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்துத் தனது வேதனையை வெளிப்படுத்திய அவர், “இந்தத் தொடர் தோல்விகளைத் தவிர்த்து, வெற்றிக்காக அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்பதே தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. அந்த எதிர்பார்ப்பைத்தான் நாங்கள் பிரதிபலித்தோம்” என்று அவர் விளக்கம் அளித்தார்.

ஓ.பி.எஸ்., சசிகலா உள்ளிட்டோரைச் சந்தித்ததன் நோக்கம், கட்சியை இணைத்து பலப்படுத்துவதுதான் என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இ.பி.எஸ்-ன் இந்த தன்னிச்சையான நடவடிக்கைக்கு எதிராக செங்கோட்டையன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.