தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றிலேயே மிகப்பெரிய அரசியல் திருப்பமாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோட்டையான கொளத்தூர் தொகுதியில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வி.எஸ்.பாபு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் தனது 15 ஆண்டு கால அரசியல் ஆசையை அவர் நிறைவேற்றிக் கொண்டதாகத் தவெக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஒரு காலத்தில் திமுகவின் வடசென்னை மாவட்டச் செயலாளராகவும், ஸ்டாலினுக்கு நெருக்கமானவராகவும் இருந்தவர் வி.எஸ்.பாபு. 2011-ல் கொளத்தூர் தொகுதி உருவானபோது, ஸ்டாலினின் வெற்றிக்காகக் களத்தில் இறங்கி வேலை பார்த்தவர் இவர்தான். ஆனால், அந்தத் தேர்தலில் ஸ்டாலின் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் (2000 வாக்குகள்) மட்டுமே வென்றதால், பாபு மீது ஸ்டாலின் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது.
திமுகவில் ஓரங்கட்டப்பட்டதால் அதிமுகவில் இணைந்த வி.எஸ்.பாபு, அங்கேயும் சில சிக்கல்களைச் சந்தித்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் விவகாரத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர், மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இணைந்தார். இருப்பினும், தேர்தல் நேரத்தில் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டதால், ஆவேசமடைந்த அவர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
முதலமைச்சர் ஸ்டாலினை நேரடியாக எதிர்க்கும் வாய்ப்பை விஜய்யிடம் பெற்றார் பாபு. 2011-ல் யாருக்காக உழைத்தாரோ, அதே ஸ்டாலினை 2026-ல் வீழ்த்த வேண்டும் என்ற வைராக்கியத்துடன் களப்பணியாற்றினார். தற்போது வெளியாகியுள்ள முடிவுகளின்படி, கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை வீழ்த்தி வி.எஸ்.பாபு வெற்றி பெற்றுள்ளார். “2011-ல் இழந்த உரிமையை, 2026-ல் மீட்டெடுத்து விட்டார்” என அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். தமிழகத்தின் “பவர்ஃபுல்” முதல்வரையே அவரது சொந்தத் தொகுதியில் வீழ்த்தியதன் மூலம், வி.எஸ்.பாபு தமிழக அரசியலின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
