2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளன. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தற்போதைய ஆளுங்கட்சியான திமுக 59 இடங்களுடன் இரண்டாம் இடத்திற்கும், அதிமுக 47 இடங்களுடன் மூன்றாம் இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தின் இந்த அதிரடி அரசியல் மாற்றத்தை ஒட்டி, திரைத்துறை மற்றும் கலைத்துறையைச் சார்ந்த முக்கிய ஆளுமைகள் விஜய்க்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குநர் ப.ரஞ்சித் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஆண்டாண்டு காலமாக வேட்பாளர் தேர்வில் பின்பற்றப்படும் சாதிய முறையையும், பணபலம் இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற பிம்பத்தையும் இந்த வெற்றி உடைத்தெறிந்துள்ளது. மக்களின் பேராதரவைப் பெற்றுள்ள உங்களது அரசு, மக்களின் தேவைகளை உணர்ந்து செயல்படும் அரசாக அமைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இயக்குநர் மாரி செல்வராஜ் தேர்தல் முடிவுகள் குறித்து மாரி செல்வராஜ் பகிர்ந்துள்ள பதிவில்,

இந்த முடிவுகள் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் தருகின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தோல்வி மனதை பிசைகிறது. சித்தாந்தம், கொள்கைகளைத் தாண்டி மக்களின் பிரியமே தேர்தல் அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளது. முதல் தேர்தலிலேயே பெரிய வெற்றியைப் பெற்றுள்ள விஜய் சாருக்கு வாழ்த்துகள். மக்கள் பணி சிறக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் தங்கர் பச்சான் விஜய்க்கு அறிவுரை கலந்த வாழ்த்துகளை வழங்கியுள்ள இயக்குநர் தங்கர் பச்சான், “மக்களுக்காக உழைக்கும் தலைவனைத் தான் தமிழகம் தேடிக்கொண்டிருக்கிறது. அரசியலை வணிகமாகப் பார்க்காமல், நேர்மையான பாதையில் செல்லுங்கள். வாரத்திற்கு ஒருமுறையாவது ஊடகங்களைச் சந்தியுங்கள். சமூக வலைதளக் கூலியாட்களைத் தவிர்த்து, தமிழுக்கும் தமிழர்களுக்கும் பாடுபட்டால் மக்கள் உங்களைக் கொண்டாடிக் கொண்டே இருப்பார்கள் என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

கலை உலகின் சகபயணி என்ற முறையில் வாழ்த்து தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து, வெற்றி-தோல்வி இரண்டுமே பாரங்கள் தான். தோல்வி முதுகில் சுமக்கும் பாரம் என்றால், வெற்றி என்பது தலையில் சுமக்கும் பாரம். நீங்கள் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தான் உங்கள் ஆட்சியின் மாட்சி அடங்கியிருக்கிறது எனத் தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தலின் மிக முக்கியமான நிகழ்வாக, திருப்பத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர், அமைச்சர் பெரியகருப்பனை வெறும் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தமிழகத்தின் புதிய முதல்வராக விஜய் பொறுப்பேற்க உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தவெக தொண்டர்கள் இந்த வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.