மதுரை எம்ஜிஆர் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாநில அளவிலான பாரதியார் தின குடியரசு தின விழா ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளை அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்கள். அதன் பிறகு விழாவில் கலந்து கொண்டவர்களிடம் அமைச்சர் பிடிஆர் பேசினார்.

அவர் பேசியதாவது, கல்விதான் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு அடித்தளம். கல்வி மட்டும் தான் ஒவ்வொரு மனிதருக்கும் மனித நேயம் உள்ளிட்ட அடிப்படை குணங்களை வளர்க்கும். மாணவ மாணவிகள் வகுப்பறையில் அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களை கற்பது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு விளையாட்டுகளிலும் பங்கேற்பது முக்கியம்.

விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதன் மூலம் வெற்றி பெறுவதற்கான வியூகம், உழைப்பு மற்றும் சக மாணவர்களுடன் நட்புணர்வு போன்ற பண்புகள் வளர்வதோடு வெற்றி மற்றும் தோல்வியை சமமாக கருதும் மனநிலையும் உருவாகும். இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக்கல்வித்துறை மற்றும் விளையாட்டு துறைகள் போன்றவற்றில் பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்று கூறினார்.