தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தேர்தல் அறிக்கை வரும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தன்று வெளியிடப்பட உள்ளது. உழைக்கும் வர்க்கத்தை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில், மாணவர்களுக்கு இலவசக் கணினி உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் இடம்பெற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே மகளிர் நலன் சார்ந்த வாக்குறுதிகளை அறிவித்து வருகின்றன. திமுகவும் தனது பழைய திட்டங்களின் நிதியுதவியை உயர்த்தி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்தச் சூழலில், முதல்முறையாகத் தேர்தல் களத்தைச் சந்திக்கும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், பெண் வாக்காளர்களைக் கவரும் வகையில் மார்ச் 8-ஆம் தேதி மகளிர் தினத்தன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, மக்களிடம் நேரடியாகக் கருத்துகள் கேட்கப்பட்டு இந்தத் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக: விவசாயிகள், மீனவர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன்களுக்கு அதீத முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த இலவசக் கையடக்கக் கணினி (Tablet) மற்றும் அதிவேக இணையச் சேவை குறித்த அறிவிப்புகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் “ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு” என விஜய் வெளிப்படையாக அறிவித்திருந்தார். இருப்பினும், இதுவரை எந்தவொரு பெரிய கட்சியும் த.வெ.க-வுடன் கூட்டணி அமைக்க முன்வராததால், அக்கட்சி தனித்துப் போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ‘விசில்’சின்னத்தை ஒதுக்கியுள்ளது.

மேலும் விசில் சின்னம் கிடைத்துள்ள உற்சாகத்தில் இருக்கும் த.வெ.க தொண்டர்கள், தேர்தல் அறிக்கை வெளியானவுடன் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடத் தயாராகி வருகின்றனர். விஜய்யின் இந்த முதல் தேர்தல் அறிக்கை தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் விமர்சகர்களிடையே எழுந்துள்ளது.