தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் பெற்றுள்ள இமாலய வெற்றி, கடல் தாண்டி இலங்கையிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் முன்னணித் தமிழ் ஊடகங்கள் அனைத்தும் விஜய்யின் வெற்றியையே தங்களின் தலைப்புச் செய்திகளாக வெளியிட்டுள்ளன. ‘தமிழன்’ பத்திரிகை, “தமிழகத்தில் விஜய் சுனாமி” எனப் பிரம்மாண்டமாகச் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், வீரகேசரி மற்றும் தினகரன் நாளிதழ்களும் தவெக-வின் விஸ்வரூப வெற்றியைக் கொண்டாடி தீர்த்துள்ளன.
குறிப்பாக, பிரபல கார்ட்டூனிஸ்ட் அவந்தா ஆர்டிகலா வரைந்த விஜய்யின் கேலிச்சித்திரம் ‘டெய்லி மிரர்’ (Daily Mirror) ஆங்கில நாளிதழில் வெளியாகி உலக அளவில் வைரலாகி வருகிறது. இலங்கையில் விஜய்க்கு இருக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம், இந்த வெற்றியைத் தங்கள் வீட்டு வெற்றியாகவே கொண்டாடி வருகின்றனர். தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் ஈழத் தமிழர்களின் வாழ்விலும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் சிலாகிக்கின்றன.
