கேரள மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் உள்ள கோழி மற்றும் வாத்துப் பண்ணைகளில் பறவைகள் அடுத்தடுத்து உயிரிழந்ததை அடுத்து, போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய் கண்டறியும் ஆய்வகத்திற்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டன.
அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பறவைக் காய்ச்சல் (Bird Flu) தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, ஆலப்புழாவின் நெடுமுடி, செருத்தானா, கருவட்டா உள்ளிட்ட பல்வேறு பஞ்சாயத்துகளிலும், கோட்டயத்தின் குருபந்தரா, மஞ்சூர் போன்ற வார்டுகளிலும் நோய் பரவலைத் தடுக்க கால்நடை பராமரிப்புத்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் கோழி, வாத்து மற்றும் காடை இறைச்சி மற்றும் முட்டை விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, நோய் பரவலைக் கட்டுப்படுத்த பண்ணைகளில் உள்ள ஆயிரக்கணக்கான பறவைகளை மொத்தமாக அழிக்கவும் அதிகாரிகள் அதிரடி உத்தரவிட்டுள்ளனர்.
