விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருக்கும் ‘குக் வித் கோமாளி’ சீசன் 7 படப்பிடிப்பு தளத்தில், கோமாளி திவாகர் மீது சக கலைஞர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. ஈவிபி (EVP) பிலிம் சிட்டியில் நடந்த சூட்டிங்கின் போது, புகழ், மாகாபா ஆனந்த் மற்றும் கானா வினோத் ஆகிய மூவரும் தன்னைத் தரக்குறைவாகப் பேசி, தாக்கியதாகத் திவாகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதில் மாகாபா ஆனந்த் மது அருந்திவிட்டு வந்து இரும்பு கம்பியால் தனது காலில் அடித்ததாக அவர் கூறியிருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

​செய்தியாளர்களைச் சந்தித்த திவாகர், “நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தது புகழுக்கு பிடிக்கவில்லை. அவர் பலருடைய வளர்ச்சியைத் தடுக்கிறார். கானா வினோத் என் குடும்பத்தைப் பற்றி ஆபாசமாகப் பேசினார்” என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்தப் புகாரைத் தொடர்ந்து போலீசார் அவர்களை விசாரணைக்கு அழைத்தும், அவர்கள் இன்னும் ஆஜராகவில்லை எனத் தெரிகிறது. புகழுக்கும் திவாகருக்கும் இடையே ஏற்கனவே மோதல் இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், இந்த விவகாரம் விஜய் டிவி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.