
கூகுள் மேப் என்பது நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் மிக முக்கியமான பயன்பாடுகளில் ஒன்று. இது எப்படி செயல்படுகிறது என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும்.
முதலில், செயற்கைக்கோள்கள் பூமியின் புகைப்படங்களை எடுத்து அனுப்புகின்றன. இந்த படங்களை கூகுள் தனது சேவையாளர்களில் சேமித்து வைக்கிறது. பின்னர், கார்களில் பொருத்தப்பட்ட கேமராக்கள் தெருக்களின் படங்களை 360 டிகிரி கோணத்தில் எடுத்து அனுப்புகின்றன. இதன் மூலம் நாம் தெருக்களை நேரடியாக பார்க்கும் விதமாக கூகுள் மேப் உருவாக்கப்படுகிறது.
இதோடு நின்றுவிடாமல், கூகுள் மேப் பயனர்களின் தரவுகளையும் பயன்படுத்துகிறது. போக்குவரத்து நெரிசல், வணிக நிறுவனங்களின் தகவல், பயனர்கள் செல்லும் இடங்கள் போன்ற தகவல்கள் அனைத்தும் கூகுள் மேப்பில் சேர்க்கப்பட்டும் வருகிறது. இதில் பயனர்கள் கொடுக்கும் தகவல் தவறாக இருக்கும்பட்சத்தில் நாம் வழி மாறி செல்ல நேரிடலாம். இப்படி ஒரு விபத்து சமீபத்தில் கேரளாவில் நடந்துள்ளது.
அது என்னவெனில் கேரளா மாநிலம் ஆலப்புழாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் 3 நண்பர்கள் ஆலப்புழா ரிசார்ட்டில் நடைபெற்ற பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர். பார்ட்டி முடிந்து இரவு 11:30 மணியளவில் அவர்கள் 3 பேரும் கிளம்ப தயாராகி உள்ளனர். அவர்களுக்கு அந்த இடம் பரிச்சயம் இல்லாத காரணத்தால் கூகுள் மேப் உதவியுடன் தங்களது பயணத்தை தொடங்கியுள்ளனர்.
அதில் ஒருவர் பைக்கில் கூகுள் மேப் செட் செய்து அதன் வழி காட்டலின் படி செல்லவும் காரில் பின்னால் வந்தவர்கள் அவரை பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர். திடீரென ஒரு கட்டத்தில் கூகுள் மேப் தவறான தகவலை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்கள் சென்ற பைக், கார் இரண்டு வாகனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து ஏரிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. அப்பொழுது அந்த பகுதியில் இருந்த மீனவர்கள் மற்றும் இளைஞர்கள் வந்து அவர்களை காப்பாற்றியுள்ளனர்.
எவ்வளவு தலைசிறந்த தொழில்நுட்பமாக இருந்தாலும், அது மனிதனால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் தான். அதிலும் பிழைகள் இருக்கும். எனவே தொழிநுட்பத்தை வெறும் கருவியாக பயன்படுத்தி கொள்ளலாமே தவிர அதையே முழுமையாக நம்பும்பட்சத்தில், சில தவிர்க்கமுடியாத அசம்பாவிதங்களை நாம் சந்திக்க நேரிடும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.