உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் அருகே உள்ள ஹதிம் சராய் இரயில்வே கேட்டில் எடுக்கப்பட்ட 44 வினாடி வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், பாதுகாப்பற்ற இரயில்வே கேட் பகுதியில் போக்குவரத்தை நிறுத்த வழியில்லாததால், இரயில் ஓட்டுநரே கீழே இறங்கி ஒரு கயிற்றை சாலையின் குறுக்கே கட்டி வாகனங்களை நிறுத்துகிறார்.

இரயில் மெதுவாக நகரத் தொடங்கியதும், கயிற்றைப் பிடித்துக் கொண்டே போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் அவர், இரயில் சென்றுகொண்டிருக்கும் போதே ஓடும் இரயிலில் ஏறுவது பார்ப்பவர்களைப் பதற வைக்கிறது.

இந்திய இரயில்வே பாதுகாப்பற்ற கேட் இல்லாத பகுதிகளைக் குறைத்துவிட்டதாகக் கூறி வரும் நிலையில், இந்தச் சம்பவம் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள், இது அந்த ஓட்டுநரின் வீரச் செயல் அல்ல, மாறாக இரயில்வே கட்டமைப்பின் தோல்வி என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ஒரு தனி நபர் தனது உயிரைப் பணயம் வைத்து போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் நிலை இருப்பது மிகவும் ஆபத்தானது என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

“>

 

கிராமப்புறங்களில் இரயில்வே பாதுகாப்புத் தரநிலைகள் எந்த நிலையில் உள்ளன என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி என்று கூறி, இரயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.