ஐபிஎல் (IPL) டி20 கிரிக்கெட் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டு, பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள ‘இம்பாக்ட் பிளேயர்’ (Impact Player) விதியை உடனடியாக நீக்க வேண்டும் என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் காரசாரமாக வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அதிரடி கருத்தில், “தனிப்பட்ட முறையில் ஐபிஎல் தொடரில் அமலில் உள்ள இம்பாக்ட் பிளேயர் விதி முற்றிலும் நீக்கப்பட வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.
டி20 கிரிக்கெட் என்பது வெறும் 20 ஓவர்கள் மட்டுமே விளையாடக்கூடிய ஒரு போட்டி. இதில் எதற்காக ஒரு கூடுதல் பேட்ஸ்மேனை அணியில் சேர்க்கும் விதியை அனுமதிக்க வேண்டும்?” என அவர் மிக ஓப்பனாகக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தற்போதைய நவீன கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்கள் ஏற்கனவே பேட்ஸ்மேன்களிடம் இருந்து மிகப்பெரிய சவால்களையும், ரன் குவித்து வறுத்தெடுக்கப்படும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு வருகின்றனர்.
இப்படியான சூழலில், இந்த இம்பாக்ட் பிளேயர் விதியானது பேட்ஸ்மேன்களுக்கு மேலும் கூடுதல் சாதகமாக அமைந்து, பேட்டிங் – பௌலிங் இடையேயான ஆட்டத்தின் சமநிலையை (Balance) முற்றிலும் குலைப்பதாகத் தான் உணர்வதாகச் சச்சின் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டின் கடவுள் என்றழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரே இந்த விதிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ள விவகாரம், பிசிசிஐ (BCCI) வட்டாரத்தை யோசிக்க வைத்துள்ளதோடு, சோஷியல் மீடியாவிலும் அனல் பறக்கும் விவாதங்களை உருவாக்கியுள்ளது.
