கர்நாடக மைசூரு சரஸ்வதிபுரம் பகுதியில் வெளிநாட்டுப் பயணம் செல்வது தொடர்பான குடும்பத் தகராறில், 46 வயது இல்லத்தரசி மர்மமான முறையில் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக அவரது மகளே, தனது தந்தை மற்றும் தம்பி மீது கொலைப் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த சந்தியா (46),  ரங்கநாத் என்பவரை 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சிருஷ்டி என்ற மகளும், கௌஷிக் (17) என்ற மகனும் உள்ளனர். மகள் சிருஷ்டி வெளிநாட்டில் உயர்கல்வி பயின்று வரும் நிலையில், மற்றவர்கள் மைசூருவில் வசித்து வந்தனர்.

கடந்த புதன்கிழமை மாலை, வெளிநாட்டுப் பயணம் செல்வது தொடர்பாக தம்பதியிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு ரங்கநாத் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், சந்தியா தனது அறையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வெளிநாட்டிலிருந்து தாயின் மரணச் செய்தி கேட்டு வந்த மகள் சிருஷ்டி, இது தற்கொலை அல்ல, ‘கொலை’ என்று அதிரடி புகார் தெரிவித்துள்ளார். தனது தாயை தந்தையும், தம்பியும் சேர்ந்து மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தி வந்ததாகவும், அவர்களே தாயின் மரணத்திற்கு காரணம் என்றும் கூறி அவர்களுக்குக் கடும் தண்டனை வழங்கக் கோரியுள்ளார்.

மகளின் குற்றச்சாட்டை ரங்கநாத்தும், கௌசிக்கும் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இது தொடர்பாக  ரங்கநாத் கூறுகையில் மகனின் தேர்வு நெருங்குவதால் இப்போது வெளிநாடு செல்ல வேண்டாம் என்றுதான் கூறினேன். என் மனைவி மீது நான் மிகுந்த அன்பு வைத்திருந்தேன். குடும்ப சொத்தில் 90 சதவீதம் அவர் பெயரில்தான் உள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கை உண்மை என்ன என்பதைத் தெரிவிக்கும்” எனக் கூறியுள்ளார்.

இதேபோன்று மகன் கௌஷிக் கூறுகையில் அக்கா வெளிநாட்டில் இருந்து கொண்டு எதையும் நேரில் பார்க்காமல் பொய்யான புகாரை கூறுகிறார். நான்தான் அம்மாவை முதலில் பார்த்தேன், அப்போது அப்பா வீட்டில் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் சந்தியாவின் சகோதரர் குருமூர்த்தி அளித்த புகாரின் பேரில்,  காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக ஏற்பட்ட சிறிய தகராறு, தற்போது ஒரு குடும்பத்தையே பிளவுபடுத்தி சட்டப் போராட்டமாக மாறியிருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.