திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் ராஜகோபுரத்தின் மீது ஏறிய போதை ஆசாமி ஒருவர், அங்கிருந்த தங்கக் கலசத்தைச் சேதப்படுத்தியதோடு, ‘மது வாங்கிக் கொடுத்தால் மட்டுமே கீழே இறங்குவேன்’ என ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிந்தராஜ சுவாமி கோயிலில், இன்று காலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென 7 நிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்தின் உச்சிக்கு ஏறினார். கோபுரத்தின் உச்சியில் நின்றுகொண்டு அங்கிருந்த தங்கக் கலசத்தை அந்த நபர் பலமாகத் தாக்கி சேதப்படுத்தினார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பக்தர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் அவரை கீழே இறங்குமாறு கூச்சலிட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மற்றும் தீயணைப்புப் படையினர், அந்த நபரை கீழே இறக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், குடிபோதையில் இருந்த அந்த நபர், “எனக்கு மது வாங்கிக் கொடுத்தால் மட்டுமே கீழே இறங்குவேன்” எனக்கூறி போலீஸாரையே மிரட்டினார். இதனால் கோயில் வளாகத்தில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாகப் பதற்றமான சூழல் நிலவியது.

சுமார் 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, போலீஸார் அந்த நபரைத் தந்திரமாகப் பிடித்து கீழே இறக்கினர். முதற்கட்ட விசாரணையில், பிடிபட்ட நபர் தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த குட்டாடி திருப்பதி என்பது தெரியவந்தது.

கோயிலின் புனிதத்தைக் கெடுக்கும் வகையில் நடந்துகொண்டது மற்றும் பொதுச் சொத்தைச் சேதப்படுத்தியது ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். புனிதமான கோயில் கோபுரத்தின் மீது ஏறி போதை ஆசாமி செய்த இந்த ரகளை, திருப்பதிக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.