கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் மனிதனை அல்ல, காகமே ‘திருடன்’ ஆன வினோதமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
மதிலகத்தைச் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர் ஷெர்லி ஆகஸ்ட் 13ஆம் தேதி அங்கன்வாடி வளாகத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, கழுத்தில் இருந்த ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை கழற்றி அருகிலுள்ள படிக்கட்டுகளில் வைத்திருந்தார். அங்கிருந்த உணவுப் பொட்டலத்தையும் கவனித்துக் கொண்டிருந்த காகம், திடீரென பறந்து வந்து சங்கிலியையே தூக்கிச் சென்றது.
காகம் சங்கிலியைக் கொண்டு பறப்பதை கண்டு ஷெர்லி அலறி உதவி கேட்டு ஓடினார். உள்ளூர் மக்கள் கூட அவரது கூச்சலுக்குப் பின்னால் விரைந்து சென்றனர். சங்கிலியை வாயில் கொண்ட காகம் அருகிலுள்ள மரத்தில் அமர்ந்தவுடன், ஒருவர் கல்லை எறிந்ததால் சங்கிலி கீழே விழுந்தது. உடனே ஷெர்லி மற்றும் கிராம மக்கள் சங்கிலியை மீட்டனர். அதிர்ச்சி சம்பவம் என்றாலும், தங்கச் சங்கிலியை மீட்டதனால் ஷெர்லி நிம்மதி அடைந்தார்.
இதுவே முதல் முறை அல்ல. கேரளாவின் கோழிக்கோட்டிலும் இதற்கு முன்பு இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது. அங்கு ஒரு பெண்ணின் தங்க வளையலை காகம் பறித்துச் சென்றது. விலங்குகள், குறிப்பாக காகங்கள், பளபளக்கும் பொருட்களை கவர்ந்து செல்வது வழக்கமென்பதை இந்த சம்பவம் மீண்டும் நிரூபித்துள்ளது.
