அதிமுக கட்சியின் சின்னம் தொடர்பான விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்துவதற்கு தடை கோரிய எடப்பாடி பழனிச்சாமியின் வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாகவும் நேற்று அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, இரட்டை இலையை ஒதுக்க வேண்டிய அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு மட்டும்தான் உள்ளது என்பதுதான் என்னுடைய வாதமாக இருந்தது. மிக்க மகிழ்ச்சியான தருணமாக இதை பார்க்கின்றேன். நீதிபதி மிக அருமையான தீர்ப்பை சென்னை நீதிமன்றத்தில் கொடுத்துள்ளார். இரட்டை இலை சின்னம் தொடர்பான தடையாணை நீக்கப்பட்டுள்ளது. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும். அதிமுக பொதுச்செயலாளர் என்ற பதவி பெயரை பயன்படுத்தக் கூடாது. கட்சி பெயரையும் பயன்படுத்தக் கூடாது.

உரிமைகள் நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருக்கும் வரை எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்த ஒரு அதிகாரமும் கிடையாது. எனவே அவர் யாரையும் ஏமாற்ற வேண்டாம் என்பதுதான் என்னுடைய கோரிக்கை. என்னை பொருத்தவரை எம்ஜிஆர் கொடுத்த இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்பதல்ல. பழனிச்சாமி என்ற தீய சக்தியிடம் இரட்டை இலை சின்னம் இருக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய நோக்கம் என்று புகழேந்தி ஆவேசமாக பேசியுள்ளார்.