ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவருக்கு நேர்ந்த விபரீதச் சம்பவம், வயர்லெஸ் இயர்பட்ஸ் பயன்படுத்துபவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த மாணவி தனது ‘JBL’ நிறுவன இயர்பட்ஸ் மூலம் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தபோது, வலது பக்க காதில் இருந்த இயர்பட்ஸ் திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது.

இதில் பலத்த காயமடைந்த அந்த மாணவிக்கு காது ஜவ்வு வீக்கமடைந்து (Tympanic Membrane Inflammation), வாந்தி மற்றும் தலைசுற்றல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இது குறித்து அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் மருத்துவ அறிக்கையுடன் பதிவிட்ட புகாரில், ஒரு மாதத்திற்கு முன்புதான் இந்த இயர்பட்ஸ் பரிசாகக் கிடைத்தது என்றும், இது போன்ற சாதனங்களின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, ஜேபிஎல் (JBL) நிறுவனம் இதற்குப் பதிலளித்துள்ளது. மாணவியின் புகாரைக் கவனித்துள்ளதாகவும், இது குறித்து இந்தியாவின் தொழில்நுட்பக் குழு நேரடியாகத் தொடர்புகொண்டு விசாரணை நடத்தும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.