அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அதிரடி மாற்றங்களுக்கு மகுடம் சூட்டியது போல, சசிகலாவின் இந்த ‘ஒன்றிணைப்பு’ அழைப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை பற்றவைத்துள்ளது.

தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த விவகாரத்தில் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 25 முக்கிய தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியால் அதிரடியாக நீக்கப்பட்ட நிலையில், “அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் காலத்தின் கட்டாயம்” என சசிகலா உருக்கமாகப் பேட்டியளித்துள்ளார்.

முன்னதாக, கட்சியைப் பலப்படுத்த சசிகலா மற்றும் டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என எஸ்.பி.வேலுமணி பகிரங்கமாகத் தெரிவித்திருந்த நிலையில், அதற்குப் பச்சைக்கொடி காட்டும் விதமாக சசிகலா விடுத்திருக்கும் இந்த அழைப்பு, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் ஒற்றைத் தலைமைக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே பார்க்கப்படுகிறது.

சிதறிக் கிடக்கும் இரட்டை இலையை மீண்டும் ஒன்றிணைக்க ‘சின்னம்மா’ எடுத்துள்ள இந்த முடிவு, அதிமுக தொண்டர்களிடையே ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.