தமிழக வெற்றிக் கழக அரசு மீது சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று வரும் சூழலில், ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். சட்டமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர், “நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை. மொத்தம் பதிவான 4.93 கோடி வாக்குகளில், ஆளுங்கட்சி பெற்றுள்ளது வெறும் 1.72 கோடி வாக்குகள் மட்டுமே. மீதமுள்ள 3.21 கோடி மக்கள் உங்களுக்கு எதிராகவே வாக்களித்துள்ளனர்.

ஏறத்தாழ 65 சதவீத மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்த ஆட்சி மீது, எங்களுக்கு மட்டுமல்லாது உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கே நம்பிக்கை குறைந்து வருகிறது” எனத் தெரிவித்தார்.
ஆட்சியின் செயல்பாடுகளைச் சாடிய அவர், “அதிமுக பிளவுபட்டுள்ளது; அதில் ஒரு பிரிவினர் உங்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். அதற்குப் பிறகுதான் பெரிய திருப்பமேநடந்தது. அந்தப் பிரிவில் உள்ள ஒருவரது வீட்டிற்குப் புதிய சோஃபா செல்கிறது, பின்னாலேயே புதிய முதலமைச்சரும் செல்கிறார்.

மொத்தத்தில் சினிமா பாணியில், குறிப்பாக ‘புஷ்பா’ பட பாணியில் இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது” என்று கிண்டலாகக் குறிப்பிட்டார். தமிழக வெற்றிக் கழக அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவரின் இந்தப் பேச்சு பேரவையில் அனல் பறக்கும் விவாதத்தை ஏற்படுத்தியது.

மேலும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் ஆட்சி நடத்தாமல் ரியல் ஆட்சி நடத்துங்கள் அது மட்டுமே மக்கள் உங்களிடம் கேட்கிறார்கள் என்றார். மேலும் இன்ஸ்டாகிராமில் விர்ச்சுவல் வாரியர்ஸ் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக பல வீடியோக்கள் வெளியிடும் நிலையில் உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு பேசியுள்ளது தற்போது கவனிக்கத்தக்க ஒரு விஷயமாக மாறி உள்ளது.