
மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு வருகிற அக்டோபர் 9ஆம் தேதி தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று தமிழகத்தில் மயிலாடுதுறை, கடலூர், சேலம், ஈரோடு, நீலகிரி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 13 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் நகரின் ஒரு சில இடங்களில் மழை பொழிய வாய்ப்பு உள்ளது. அக்டோபர் 15ஆம் தேதி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.