தமிழ்நாடு முழுவதும் உள்ள 2 கோடிக்கும் அதிகமான அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 3,000 ரூபாய் ரொக்கப்பணம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 8-ம் தேதி தொடங்கி வைத்தார். இந்தப் பரிசுத் தொகுப்பைப் பெறுவதற்காக முறையாக டோக்கன்கள் வழங்கப்பட்டு விநியோகம் நடைபெற்று வந்தது. இருப்பினும், பொங்கல் பண்டிகை முடிந்துள்ள நிலையில் தற்போது வரை சுமார் 90 சதவீத அட்டைதாரர்கள் மட்டுமே இந்தப் பலனைப் பெற்றுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

​எனவே, இதுவரை பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் 3,000 ரூபாய் பணத்தைப் பெறாத விடுபட்ட ரேஷன் அட்டைதாரர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் அந்தந்த ரேஷன் கடைகளில் சென்று அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை இந்த விநியோகம் தொடரும் என்பதால், விடுபட்டவர்கள் தங்களுக்குரிய பொருட்களை எவ்விதத் தடங்கலுமின்றிப் பெற்றுக் கொள்ளலாம் என்று ரேஷன் கடை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.