பல்லாவரம் அடுத்த பம்மலில் நடைபெற்ற தேமுதிக நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், கூட்டணி குறித்து மிக முக்கியமான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். 2026 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில், “நாம் எப்போதும் சத்திரியனாக மட்டுமே இருப்பதை விட, காலத்தின் தேவைக்கேற்ப சாணக்கியனாக மாற வேண்டும்” என்று அவர் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுப்பதை விட, சாணக்கியத்தனத்துடன் காய் நகர்த்துவதே இப்போதைய அரசியல் சூழலுக்குத் தேவை என்பதை அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய அவர், கூட்டணி குறித்த இறுதி முடிவைப் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விரைவில் முறைப்படி அறிவிப்பார் என்றும், அதுவரை தொண்டர்கள் பொறுமையுடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

“எங்கள் குடும்பத்திற்கோ அல்லது எனக்கோ எம்.எல்.ஏ, எம்.பி ஆக வேண்டும் என்ற பதவி ஆசை கிடையாது; கட்சியின் தொண்டர்கள் உயரிய பதவிகளுக்கு வருவதையே நாங்கள் விரும்புகிறோம்” என்று உருக்கமாகப் பேசினார். அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுடனும் தேமுதிக தரப்பில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் ரகசியமாக நடந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், விஜய பிரபாகரனின் இந்த ‘சாணக்கிய’ பேச்சு அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளது.