டெல்லி பிரீமியர் லீக் 2026 கிரிக்கெட் தொடரில் தனது அதிவேக பந்துவீச்சால் அசத்தியுள்ளார் 25 வயதான அன்ஷுமன் ஹூடா. தெற்கு டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடிய அவர், தொடரில் அதிகபட்சமாக 22 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் கேப்பை கைப்பற்றினார். மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் தொடர்ந்து பந்துவீசி எதிரணி வீரர்களுக்கு கடும் சவால் அளித்தார். அவரது பந்துவீச்சு அணியின் வெற்றியிலும் முக்கிய பங்கு வகித்தது. இதன் மூலம் உள்நாட்டு கிரிக்கெட் அரங்கில் தனது வருகையை அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த அன்ஷுமன் ஹூடா, சிறு வயதில் கிரிக்கெட் பயிற்சி மையத்தில் வளர்ந்தவர் அல்ல. மாறாக, தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் வீரராக இருந்துள்ளார். பின்னர் டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உற்பத்தி மற்றும் தொழில்துறை பொறியியல் படிப்பை முடித்தார். 2023-ஆம் ஆண்டு கல்லூரி வளாகத் தேர்வு மூலம் தனியார் நிறுவனத்தில் பொறியியல் பணியில் சேர்ந்தார். எனினும், கிரிக்கெட் மீதான ஆர்வம் அவரை தொடர்ந்து விளையாட்டுத் துறையை நோக்கி அழைத்துச் சென்றது.
கல்லூரியில் படித்த காலத்தில் டென்னிஸ் பந்து கிரிக்கெட் மட்டுமே விளையாடி வந்த அன்ஷுமனின் வேகத்தையும் உடல் தகுதியையும் பயிற்சியாளர் ஹரீஷ் தாகர் கவனித்தார். அவரது கை வேகத்தை அடிப்படையாகக் கொண்டு வேகப்பந்து வீச்சில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து டெல்லி 23 வயதுக்குட்பட்டோர் அணிக்கான தேர்வில் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பங்கேற்றார். ஆனால் முன் அனுபவமும் சாதனைப் பதிவும் இல்லாததால் அணியில் இடம் கிடைக்கவில்லை. கிரிக்கெட்டை கைவிட நினைத்தபோதும் பயிற்சியாளர் அளித்த ஊக்கத்தால் மேலும் ஓராண்டு முயற்சி செய்ய முடிவு செய்தார்.
இதற்கிடையே வீட்டிலிருந்து பணியாற்றியபடியே இரவு நேரங்களில் பல மணி நேரம் பயிற்சியில் ஈடுபட்டார். அந்த கடின உழைப்பின் பலனாக டெல்லி பிரீமியர் லீக்கில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. 2026 தொடரில் தனது வேகத்துடன் பந்துவீச்சில் பல்வேறு மாற்றங்களையும் துல்லியமான லைன் மற்றும் லெந்தையும் கடைப்பிடித்து 22 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது செயல்பாட்டை அணியின் உரிமையாளர் ஷிகர் தவானும் பாராட்டியுள்ளார். தற்போது ஐபிஎல் தொடரில் இடம்பிடிப்பதே அன்ஷுமனின் அடுத்த இலக்காக உள்ளது.
