
மும்மொழி கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்குவோம் என்று மத்திய அரசு மறைமுக மிரட்டல் விடுத்திருந்த நிலையில் தமிழ்நாட்டில் பாஜகவை தவிர்த்து பிற கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் இணைந்து நேற்று சென்னையில் மத்திய அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அன்புக்கு கட்டுப்பட்டவர்கள் தமிழர்கள். ஆனால் அடக்குமுறைக்கு நாங்கள் ஒருபோதும் பயப்பட மாட்டோம் அஞ்சவும் மாட்டோம்.
இதனை ஒன்றிய பாசிச பாஜக அரசிற்கு புரிய வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஆர்ப்பாட்டம். நீங்கள் சொல்லும் இடத்தில் எல்லாம் கையெழுத்து போடுவதற்கு இது ஒன்றும் அடிமை ஆட்சி கிடையாது. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களால் சுயமரியாதையுடன் வழிநடத்தப்படும் திராவிட மாடல் அரசு. திராவிட மாடல் முன்னோடி கொள்கையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. பிரதமர் மோடி அவர்களே, நீங்கள் சென்ற முறை எங்களின் உரிமைகளை பறித்த போது தமிழ்நாட்டு மக்கள் உங்களை Go Back மோடி என்று சொல்லி துரத்தி அடித்தார்கள். இனி மீண்டும் தமிழ்நாட்டு மக்களிடம் முயற்சி செய்தால் இந்த முறை Go Back மோடி எல்லாம் கிடையாது, Get Out மோடி என்றுதான் சொல்லி உங்களை விரட்டி அடிப்பார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.