வளைகுடா நாடுகள் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்திற்காக ஈரான் எல்லையில் அமைந்துள்ள ‘ஹார்முஸ் ஜலசந்தியை’ சார்ந்திருப்பதை முற்றிலும் தவிர்க்கும் நோக்கில், நான்கு பிரம்மாண்டமான புதிய குழாய் வழித்தடங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளன.

மேலும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் உலகின் பெரும் பகுதி கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறுகிறது ஆனால், இப்பகுதியில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் ஈரானின் ஆதிக்கம் காரணமாக விநியோகத்தில் அடிக்கடி தடைகள் ஏற்படுகின்றன. இதைச் சமாளிக்க ஈராக்-துருக்கி, ஹதீதா-அகாபா, யுஏஇ-புஜைரா மற்றும் சவுதி அரேபியாவின் கிழக்கு-மேற்கு வழித்தடங்கள் என நான்கு முக்கிய திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

இதனால் இவை பயன்பாட்டிற்கு வரும்போது, ஹார்முஸ் ஜலசந்தியின் வழியாகச் செல்லாமலேயே செங்கடல் மற்றும் மத்திய தரைக்கடல் வழியாக உலக நாடுகளுக்கு நேரடியாக எண்ணெய் விநியோகம் செய்ய முடியும். இந்த மாற்றுத் திட்டங்கள் உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதோடு, ஈரானின் மேலாதிக்கத்தைக் குறைக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறிப்பாக, இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை மீண்டும் செயல்படுத்துவதன் மூலம், தெற்காசிய நாடுகளுக்குத் தடையின்றி எரிபொருள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன. இந்தத் திட்டங்கள் ஈரானுக்குப் பெரும் பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை நிலையாக வைத்திருக்க இது மிகவும் அவசியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.