ஆதார் எண் என்பது, மத்திய அரசின் சார்பில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வழங்கும் 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண் ஆகும். நாட்டின் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக கருதப்படும் ஆதார், வங்கி கணக்கு தொடங்குதல், சிம் கார்டு பெறுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு தேவையாகின்றது.

இந்நிலையில், ஆதார் விவரங்களில் திருத்தம் செய்யும் பணிகள் தற்போது ஆதார் சேவை மையங்கள், இ-சேவை மையங்கள் மற்றும் ஆன்லைன் வழியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த சேவையை இன்னும் எளிமைப்படுத்தும் நோக்கில் “E-Aadhaar” என்ற புதிய மொபைல் செயலியை விரைவில் அறிமுகப்படுத்துவதாக UIDAI அறிவித்துள்ளது.

இந்த செயலியின் மூலம், பயனாளர்கள் தங்களது பெயர், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட முக்கிய விவரங்களை நேரில் செல்லாமல், மொபைல் செயலியின் வாயிலாகவே திருத்தம் செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, இனிமேல் ஆதார் திருத்தத்திற்காக மையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. அனைத்து வசதிகளும் கைபேசியில் கிடைக்கும் வகையில் இந்த செயலி அமைய உள்ளது. மேலும் இதன் மூலம், பயனாளர்களுக்கு நேரம், செலவு இரண்டிலும் சலுகை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.