ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், பெண்களின் அடிப்படை உரிமைகள் நசுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது குடும்ப வன்முறையை சட்டப்பூர்வமாக்கும் புதிய சட்டத் தொகுப்பை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. தாலிபான் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதலை வழங்கியுள்ளார். புதிய சட்டத்தின் 9-வது பிரிவின் கீழ், ஆப்கான் சமூகம் நான்கு முக்கிய பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:

அதன்படி மதத் தலைவர்கள், உயர்குடி மக்கள், நடுத்தர வர்க்கத்தினர், அடித்தட்டு மக்கள் போன்றவைகளாகும். ஒருவர் செய்யும் குற்றத்திற்கான தண்டனை, அவர் எந்தச் சமூகப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதைப் பொறுத்தே இனி தீர்மானிக்கப்படும். இதன் மூலம் நீதியிலும் பாகுபாடு காட்ட தாலிபான் அரசு வழிவகை செய்துள்ளது.

பெண்களின் பாதுகாப்பிற்காக 2009-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டங்கள் அனைத்தையும் தாலிபான்கள் ரத்து செய்துள்ளனர். புதிய சட்டத்தின்படி: பெண்களை காயமின்றித் தாக்கினால் குற்றமில்லை: ஒரு ஆண் தனது வீட்டில் உள்ள பெண் அல்லது குழந்தையைத் தாக்கும்போது, வெளிப்படையாக ரத்தம் வராமலோ அல்லது எலும்பு முறிவு ஏற்படாமலோ இருந்தால், அது குற்றமாக கருதப்படாது. கணவர் தாக்கியதில் எலும்பு முறிவு ஏற்பட்டதை ஒரு பெண் நீதிமன்றத்தில் நிரூபித்தால் கூட, கணவருக்கு வெறும் 15 நாட்கள் மட்டுமே சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

பாதிக்கப்பட்ட பெண் நீதி கேட்டு நீதிமன்றத்திற்கு வர வேண்டுமானால், அவருடன் கண்டிப்பாக ஒரு ஆண் (துணைவர்/உறவினர்) வர வேண்டும். மேலும், நீதிபதியிடம் காயங்களைக் காட்டும்போது கூட உடல் முழுவதும் மூடியிருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்களின் நடமாட்டத்திற்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கணவனின் அனுமதி இன்றி ஒரு பெண் தனது உறவினர் வீட்டுக்குச் சென்றால் கூட, அவருக்கு 3 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

தாலிபான்களின் இந்த மனித உரிமையற்ற சட்டங்கள் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. பெண்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பைத் தடுத்ததைத் தொடர்ந்து, தற்போது அவர்களின் உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.