தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தினசரி சிகிச்சைக்காக வரும் புறநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், முதியவர்கள், பெண்கள் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது பதிவுச் சீட்டைப் பெறுவதற்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய கடினமான சூழல் நிலவுகிறது.

மேலும் நோயாளிகளின் இந்த சிரமத்தைக் கருத்தில் கொண்டும், மருத்துவமனைகளில் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் ஆன்லைன் இணையவழி மூலம் ஓ.பி. சீட்டு வழங்கும் புதிய நடைமுறையைக் கொண்டுவர அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த புதிய திட்டம் குறித்துப் பேசிய அமைச்சர் அருண்ராஜ், பொதுமக்கள் எந்தவித சிரமமுமின்றி எளிதாக ஆன்லைனில் ஓ.பி. சீட்டுகளைப் பெறுவதற்கு ஏதுவாக, இதற்கென பிரத்யேகமாக புதிய மொபைல் செயலி ஒன்று விரைவில் உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இந்தத் திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரும்போது, பொதுமக்கள் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பாகவே தங்களது ஸ்மார்ட்போன் மூலம் முன்பதிவு செய்து கொள்ள முடியும் என்பதால், நோயாளிகளின் நேரமும் அலைச்சலும் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.