தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகளால் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக எழுந்துள்ள விவகாரம் தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ளது. இந்த கொடூர சம்பவத்திற்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் (MLA) சரவணன் முழு ஆதரவாக செயல்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிகக் கடுமையான மற்றும் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தமிழக அரசு பெண்களின் பாதுகாப்பிற்காகப் புதிதாகத் தொடங்கியுள்ள ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ கையாளப் போகும் முதல் வழக்கே, ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் மீதான வழக்கா என அவர் மிக ஆக்ரோஷமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். ​இதுகுறித்து தமிழக முதல்வர் விஜய்க்குப் பகிரங்கமாகச் சவால் விடுத்துள்ள இபிஎஸ், உங்களைத் திரையில் ரசித்து வளர்ந்த ஒரு பெண்ணுக்கு உங்கள் ஆட்சியில், அதுவும் உங்கள் சொந்தக் கட்சியினராலேயே இப்படி ஒரு கொடுமை அரங்கேறியுள்ளது என்று மிக உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள உங்கள் கட்சி எம்.எல்.ஏ-வை உடனடியாகப் பதவியை ராஜினாமா செய்ய வைத்து, அவரைக் கைது செய்ய உங்களுக்குத் தெம்பும், திராணியும் இருக்கிறதா என்று அவர் முதல்வர் விஜய்க்கு நேரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ மற்றும் நிர்வாகிகள் மீதே பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து அதிமுக பொதுச்செயலாளர் விடுத்துள்ள இந்த அதிரடி அறிக்கை தற்பொழுது தமிழக அரசியல் அரங்கையே அதிர வைத்துள்ளது!