சென்னையில் இருந்து மதுரைக்கு தேஜஸ் ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த ரயில் குளிர்சாதன மற்றும் நவீன வசதிகளுடன் இயங்கும் சொகுசு ரயில் என்பதால் பொதுமக்கள் மத்தியில் தேஜஸ் ரயிலுக்கு தனி மவுசு உண்டு. இந்த ரயில் அதிவேகப் பயணத்திற்கும் பெயர் பெற்றது. இந்த ரயில் சேவை சென்னையில் இருந்து மதுரைக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த ரயில் காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு நண்பகல் 12.15 மணிக்கு மதுரையை சென்றடைகிறது.

அதன் பிறகு மதுரையில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு கிளம்பும் ரயில் சென்னைக்கு இரவு 9.30 மணி அளவில் செல்கிறது. இந்த ரயிலில் ஏசி சேர்கார், பிசினஸ் கிளாஸ், எக்சிகியூடிவ் வகுப்பு என 3 வகையான கட்டணங்கள் வசூலிக்கப்படும் நிலையில், மதுரையில் இருந்து சென்னைக்கு ஆறரை மணி நேரத்தில் சென்றடைவதால் ஒரே நாளில் பயணம் செல்பவர்களுக்கு இந்த ரயில் ஒரு வரப்பிரசாதமாகும்.

இந்நிலையில் தேஜஸ் ரயில் திருச்சி மற்றும் திண்டுக்கல் ரயில்வே நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் நிலையில் தாம்பரத்திலும் என்று செல்ல வேண்டும் என்பது பயணிகளின் பல வருட கோரிக்கையாக இருந்த நிலையில் தற்போது அந்த கோரிக்கையை ரயில்வே நிர்வாகம் நிறைவேற்றியுள்ளது. அதன்படி பிப்ரவரி 26-ம் தேதி முதல் 6 மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் தேஜஸ் ரயில் தாம்பரத்தில் என்று செல்லும். மேலும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தாம்பரத்தில் ரயில் சேவை நின்று செல்லும் என்ற அறிவிப்பை வெளியிட்டதற்காக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.