அதிமுகவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக விசுவாசமாக உழைத்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தற்போது தனது அரசியல் பாதையை அதிரடியாக மாற்றியுள்ளார். எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாகப் பொதுச்செயலாளர் பதவியைக் கைப்பற்றியதோடு, தன்னை எதிர்த்தவர்களைக் கட்சியிலிருந்து நீக்கியதாக ஓ.பி.எஸ் குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக பிளவுபடக்கூடாது என்று தான் நினைத்த போதும், எடப்பாடி பழனிசாமி தன்னைச் சேர்க்க மறுத்துவிட்டதாகக் கூறிய அவர், இனியும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆகிவிடக் கூடாது என்ற ஒற்றை இலக்குடன் தனது ஆதரவாளர்களுடன் தாய்க்கழகமான திமுகவில் இணைந்ததாகத் தெரிவித்துள்ளார்.

​தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடத் தனது மகன் ரவீந்திரநாத் விருப்ப மனு தாக்கல் செய்துள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்களைத் தாய் உள்ளத்தோடு ஏற்றுக்கொண்டதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். வரும் தேர்தலுக்குப் பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது என்றும், எடப்பாடி பழனிசாமி படுதோல்வி அடைவார் என்றும் ஆவேசமாகப் பேசிய அவர், மு.க.ஸ்டாலின் மீண்டும் இரண்டாவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்பார் என்று சூளுரைத்தார்.