இலங்கையில் பல ஆண்டுகளாக நிலவி வந்த போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அந்நாட்டை விட்டு வெளியேறி இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தஞ்சம் புகுந்தவர்களில் பெரும்பான்மையோர் தமிழ் பேசும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்தியாவுக்குள் வந்த இலங்கை தமிழர்கள், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் உள்ள அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இந்தியாவில் சுதந்திரமாக வாழவும், நிரந்தரத் தங்குமதிப்பை வழங்கவும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.
இந்நிலையில், முக்கியமான முன்னேற்றமாக, 2015-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதிக்கு முன் இந்தியாவுக்குள் உரிய விசா அல்லது பயண ஆவணங்களின்றி நுழைந்து, அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்களுக்கு, சட்டபூர்வமாக இந்தியாவில் தங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, இவர்கள் இனி சட்டவிரோத குடியேறிகள் என கருதப்படமாட்டார்கள். மேலும், சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தில் (Foreigners Act) உள்ள தண்டனை விதிகள் இப்போது இவ்வகை அகதிகளுக்கு விலக்காக வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானம், ஆண்டுகளாக அகதி முகாம்களில் அமைதியும் எதிர்பார்ப்போடும் வாழ்ந்த இலங்கைத் தமிழர்களுக்கு ஓர் வழிகாட்டியாக அமைந்துள்ளது. தமிழக அரசும், அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.
