அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வரும் ஏப்ரல் மாதம் சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கை நேரில் சந்திக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சமீபத்தில் இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற சுமார் 90 நிமிட தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனால் இறக்குமதி வரிகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவுடனான தற்போதைய உறவு மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும், இந்தச் சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு நேர்மறையான மைல்கல்லாக அமையும் என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஏப்ரல் மாதம் டிரம்ப் பெய்ஜிங் செல்லவிருக்கும் நிலையில், அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டின் பிற்பகுதியில் சீன அதிபர் ஷி ஜின்பிங் அமெரிக்காவிற்கு வருகை தரவுள்ளார். தென்கொரியாவின் புசான் நகரில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பின் உச்சிமாநாட்டிற்குப் பிறகு, இந்த இரண்டாம் கட்ட உயர்மட்டச் சந்திப்பு உலக நாடுகளால் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.
இது குறிப்பாக சோயா பீன்ஸ் கொள்முதல், தொழில்நுட்பக் கட்டுப்பாடுகள் மற்றும் சர்வதேச பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. இரு பெரும் வல்லரசு நாடுகளின் தலைவர்களும் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து, இணக்கமான உறவை வளர்க்க இச்சந்திப்பு வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது.
