சென்னை ராயப்பேட்டையில் ஜாவித் சைபுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர் பர்மா பஜார் பகுதியில் செல்போன்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவர் கடந்த 24ஆம் தேதி பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதாவது கடந்த 17ஆம் தேதி அவர் ஒரு விருந்து நிகழ்ச்சிக்கு சென்ற போது கத்தி முனையில் சிலர் அவரை கடத்தி சென்று பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். இதனால் பயந்து போன அவர் தன்னுடைய சகோதரர் மூலம் 2 தவணைகளாக ரூ‌.50 லட்சம் பணத்தை கொடுத்துள்ளனர்.

அதன் பிறகு  அவரை அந்த கும்பல் விட்டு விட்டதாக கூறியிருந்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது அவருடன் இளம்பெண் ஒருவர் இனிக்க இனிக்க செல்போனில் பேசியுள்ளார். அந்தப் பெண் ஜாவீத்தை பார்க்க ஆசையாக இருக்கிறது என்று கூறி பட்டினம்பாக்கம் பகுதியில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சிக்கு வருமாறு அழைத்துள்ளார். அதை நம்பி ஜாவீத்  அங்கு சென்ற நிலையில் அவரைக் கத்தி முனையில் சிலர் காரில் கடத்திச் சென்றுள்ளனர்.

அவர்கள் அவர் வைத்திருந்த ரூ‌.10,000 பணம் மற்றும் செல்போன் போன்றவற்றை திருடியதோடு ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன ஜாவீத்தும் அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதில் நேற்று முன்தினம் அவரிடம் பேசிய இளம்பெண்ணை கைது செய்துள்ளனர். அந்த இளம் பெண் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சோனியா (26). மேலும் இவரிடம் தற்போது கடத்தல் கும்பல் யார் என்றும் அவரை வைத்து தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கிறார்களா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.