
தமிழக ஆட்சியாளர்கள் தோல்வி அடைந்து விட்டார்கள் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் கடந்த 2015 ஆம் ஆண்டு பஞ்சமி நிலத்தை மீட்பதற்கு என்று உயர்நிலைக் குழுவை தமிழக அரசு அமைத்திருந்தது. இந்தக் குழு பல வருடங்களுக்குப் பிறகு 2.5 லட்சம் ஏக்கர்களை அடையாளம் கண்டுள்ளதாக செய்தி வெளியிட்டது.
ஆனால் மொத்தம் உள்ள 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தில் 2.5 லட்சம் ஏக்கர் தான் அடையாளம் காணப்பட்டிருப்பதாக உயர் நீதிமன்றத்தில் உயர்நிலைக் குழு அறிக்கை வெளியிட்டிருந்தது. ஆனால் அந்த 2.5 லட்சம் ஏக்கர் கூட இன்றுவரை மீட்கப்படவில்லை. அந்த நிலத்தை மீட்டு பட்டியல் இன மக்களிடம் ஒப்படைப்பதில் திமுக மற்றும் அதிமுக என இரண்டு அரசாங்கங்களும் அலட்சியமாகவும் மெத்தன போக்காகவும் நடந்து கொண்டுள்ளது என்பதற்கு இந்த சம்பவங்கள் தான் உதாரணம்.
அதேசமயம் பட்டியல் சமூக மக்களிடம் உள்ள பல்லாயிரக்கணக்கான நிலங்களை ஆட்சியாளர்கள் தொடர்ந்து பறித்துக் கொண்டிருக்கின்றனர். தமிழக ஆட்சியாளர்கள் இந்த விஷயத்தில் தோல்வி அடைந்து விட்டார்கள். இப்போது உள்ள தமிழக அரசாங்கமாவது உயர்நிலைக் குழு குறைந்தபட்சமாக கண்டறிந்த 2.5 லட்சம் ஏக்கர் நிலத்தை மீட்பதற்கு உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.