துருக்கி நாட்டின் குறுகிய தெரு ஒன்றில் நோயாளி ஒருவருடன் சிக்கிக் கொண்ட ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு, சிறுவன் ஒருவன் தனது சாதுர்யத்தால் வழி ஏற்படுத்திக் கொடுத்து உயிரைக் காத்த சம்பவம் உலக அளவில் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
துருக்கியின் மக்கள் நெருக்கடி மிகுந்த குறுகிய தெரு ஒன்றில், அவசர கால நோயாளி ஒருவருடன் ஆம்புலன்ஸ் வாகனம் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தது. ஆனால், சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததாலும், போக்குவரத்து நெரிசலாலும் ஆம்புலன்ஸ் மேலே செல்ல முடியாமல் சிக்கிக் கொண்டது. ஒவ்வொரு நொடியும் நோயாளியின் உயிருக்கு ஆபத்தாக மாறிக் கொண்டிருந்தது.
🔴 Dar bir sokaktan geçmeye çalışan ambulans, yaşı küçük ama yüreği kocaman bir çocuğun yolu kesmesi sayesinde hastayı acile yetiştirebildi.
Bu görüntü sadece Türkiye’de yaşanabilir diyeceğimiz tarzda. pic.twitter.com/eD00UkpToa
— Türk Pulse (@TurkPulse) May 1, 2026
அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன், நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டு ஓடி வந்தான். ஆம்புலன்ஸிற்கு முன்னால் ஓடிச் சென்று, மற்ற வாகனங்களை ஓரம் ஒதுங்கும்படி கைகாட்டி சைகை செய்தும், பாதையில் இருந்த தடைகளை அகற்றியும் வழி ஏற்படுத்தினான். அந்தச் சிறுவனின் துரிதமான செயலால், ஆம்புலன்ஸ் வாகனம் எந்தத் தடையுமின்றி அவசர சிகிச்சைப் பிரிவைச் சென்றடைந்தது.
சிறுவனின் இந்த ‘பெரிய மனது’ தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. “இத்தகைய மனிதாபிமானச் செயல்கள் துருக்கியில் மட்டுமே சாத்தியம்” என்று பலரும் அந்தச் சிறுவனைப் பாராட்டி வருகின்றனர். “வயதில் சிறியவனாக இருந்தாலும், அந்தச் சிறுவனின் உள்ளம் மிகப் பெரியது” என நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர். மேலும் ஒரு உயிர் ஊசலாடிக்கொண்டிருந்த வேளையில், எவ்வித எதிர்பார்ப்புமின்றி உதவிய அந்தச் சிறுவன் தற்போது அந்நாட்டின் ‘ரியல் ஹீரோ’வாகக் கொண்டாடப்படுகிறான்.
