ஒடிசா புவனேஸ்வரத்தில் உள்ள காவல் தலைமை அலுவலகத்தில் போலீஸ்காரராக தீபக்குமார் சவுத் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுபமித்ரா சாஷூ என்ற மனைவி இருந்தார். இவர் போக்குவரத்து காவலராக வேலை பார்த்து வந்தார். இதற்கிடையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் 10 லட்சம் கடன் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மீண்டும் தகராறு ஏற்பட்டதால் கோபமடைந்த தீபக்குமார் மனைவியை காருக்குள் வைத்து கழுத்தை நெரித்து கொன்றார்.
இதையடுத்து தீபக்குமார் புவனேஸ்வரில் இருந்து சுமார் 750 கி.மீ தூரத்தில் உள்ள கியோஞ்சி எனும் இடத்திற்கு சென்று சுபமித்ராவின் உடலை புதைத்து விட்டு அங்குள்ள கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன்பின் தீபக்குமார் எதுவும் நடக்காதது போல் மறுநாள் பணிக்கு சென்றார்.
இந்நிலையில் தீபக்குமாரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதனைத்தொடர்ந்து மனைவியை கொலை செய்ததை தீபக்குமார் ஒப்புக்கொண்டார். இதனால் காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு கடன் பிரச்சனை காரணமாக கணவர் தன் மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
