மகாராஷ்டிர மாநிலம் நவியில், 6 வயது சிறுமி மராத்தி மொழி பேசத் தெரியவில்லை என்பதற்காக அவரது தாயாலேயே கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலம்போலி பகுதியில் வசிக்கும் அந்தப் பெண்ணின் மகள், சிறுவயது முதலே பேசுவதில் சிரமம் இருந்ததால் மராத்திக்குப் பதிலாக இந்தி பேசி வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தாய், தனது மகளைக் கொலை செய்துவிட்டு, சிறுமி மாரடைப்பால் இறந்துவிட்டதாக நாடகமாடியுள்ளார். ஆனால், உடற்கூறு ஆய்வில் சிறுமி மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

காவல்துறையினரின் தீவிர விசாரணையில், அந்தப் பெண் தனது மகளைக் கொன்றதை ஒப்புக்கொண்டார். “சரியாகப் பேசத் தெரியாத குழந்தை எனக்கு வேண்டாம்” என்று அவர் அடிக்கடி கூறி வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்தப் பெண் மனநல சிகிச்சை பெற்று வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் இச்சம்பவம் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.