ஹரியானா மாநிலம் குருகிராம் துண்டஹேரா பகுதியில், 26 வயது அங்கூரி தேவி என்ற 7 மாத கர்ப்பிணிப் பெண், தனது லிவ்-இன் பார்ட்னரான ராஜன் (அனுஜ்) என்பவரால் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலைக்கான காரணம் குறித்துப் பேசிய போலீஸார், ராஜன் அங்கூரியின் கர்ப்பத்தை ஏற்க மறுத்ததாகவும், பிரசவச் செலவுகளுக்குப் பணம் கொடுக்க மறுத்ததால் ஏற்பட்ட தகராறே கொலைக்குக் காரணம் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கை போலீஸார் தற்போது இரட்டைக் கொலையாக விசாரித்து வருகின்றனர். குற்றஞ்சாட்டப்பட்ட ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநரான ராஜனை உத்தரப்பிரதேசத்தின் ஃபிரோசாபாத்தில் போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஆனால், கொலையை விட ஒரு பெரிய சிக்கல் தற்போது எழுந்துள்ளது. கொல்லப்பட்ட அங்கூரி தேவியின் உடலை ஏற்க அவரது பெற்றோர், இரண்டாவது கணவர் மற்றும் குற்றவாளியின் குடும்பத்தினர் என மூன்று தரப்பினரும் மறுத்துவிட்டனர். அங்கூரியின் பெற்றோர், “எங்கள் மகள் வீட்டை விட்டு வெளியேறிய போதே இறந்துவிட்டாள்.

இரண்டு முறை திருமணம் செய்து கொண்டு, மூன்றாவது நபருடன் லிவ்-இன் உறவில் வாழ்ந்தாள். எங்களுக்கும் அவளுக்கும் எந்த உறவும் இல்லை” என்று கூறியுள்ளனர். அதேபோல், ஒன்றரை வருடங்களுக்கு முன்பே உறவு முடிந்துவிட்டதால் உடலை ஏற்க முடியாது என்று இரண்டாவது கணவர் விஷால் மறுத்துள்ளார். ‘எங்கள் மகன் திருமணம் செய்து கொள்ளவில்லை’ என்று குற்றவாளியின் குடும்பத்தினர் உடலை ஏற்க மறுத்துவிட்டனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், அங்கூரி முன்னர் முகமது சத்ருதீனை மணந்து, பின்னர் விஷாலை நீதிமன்றத் திருமணம் செய்து, அதன் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக ராஜனுடன் லிவ்-இன் உறவில் இருந்து வந்துள்ளார்.

சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட 72 மணி நேரத்திற்குள் குடும்பத்தினர் யாரும் உடலைக் கேட்டுப் பெறவில்லை என்றால், அது உரிமை கோரப்படாத சடலமாகக் கருதப்பட்டு, அரசு செலவில் இறுதிச் சடங்குகள் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.