அகமதாபாத்தில் நடைபெற்ற 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்தது. இந்த மாபெரும் வெற்றியைக் கொண்டாடும் விதமாக, மைதானத்தில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா தனது காதலியுடன் இணைந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது அவர் தேசியக் கொடியைத் தனது உடலில் போர்த்தியபடி காதலிக்கு முத்தம் கொடுத்து அநாகரீகமாக நடந்துகொண்டதாகப் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், தேசியக் கொடியின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் பாண்டியா செயல்பட்டதாகப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, புனேவைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஜித் கான் என்பவர் சிவாஜி நகர் காவல் நிலையத்தில் ஹர்திக் பாண்டியா மீது அதிரடியாகப் புகார் அளித்துள்ளார்.
மேலும் தேசியச் சின்னங்கள் மற்றும் கொடியை அவமதிப்பது சட்டப்படி குற்றம் என்றும், தேசியக் கொடியை உடலில் சுற்றியபடி பொதுவெளியில் கண்ணியக் குறைவாக நடந்துகொண்டதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்தப் புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது. உலகக் கோப்பை நாயகனாகக் கொண்டாடப்படும் வேளையில், இத்தகைய சட்டச் சிக்கலில் பாண்டியா சிக்கியுள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
