
பிரிட்டன் நாட்டில் இந்திய வம்சாவளியான கோபிநாத் ஹிந்துஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் எண்ணெய், வர்த்தகம் மற்றும் வங்கி போன்ற பல்வேறு விதமான தொழில்களை செய்து முன்னணி தொழில் அதிபராக திகழ்கிறார். இவருக்கு ஸ்விட்சர்லாந்தில் ஒரு சொகுசு மாளிகை உள்ளது. இங்கு இந்திய பணியாளர்கள் சிலர் பணியாற்றியுள்ளனர். இவர்களை பிரகாஷ் ஹிந்துஜா (78) அவருடைய மனைவி கமல் ஹிந்துஜா (75), இவர்களுடைய மகன் அஜய் மற்றும் மருமகள் மருமகள் நம்ரதா ஆகியோர் கொடுமைப்படுத்தியதாக புகார் எழுந்தது. அதாவது அவர்களின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ததோடு குறைந்த ஊதியம் கொடுத்து கொத்தடிமை போல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதோடு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை பார்க்க நிர்பந்தப்படுத்தியதோடு சம்பளத்தை ஸ்வீஸ் நாணயத்தில் வழங்காமல் இந்திய பணத்தில் வழங்கியதாகவும் கூறப்பட்டது. இந்த வழக்கு ஜெனிவாவில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிரகாஷ் ஹிந்துஜா மற்றும் அவருடைய மனைவிக்கு தலா 4.6 வருடங்கள் சிறை தண்டனையும் அவர்களுடைய மகன் மற்றும் மருமகளுக்கு தலா 4 வருடங்கள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் தீர்ப்பு வழங்கும்போது நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. மேலும் இந்த வழக்கை எதிர்த்து அவர்கள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக அவர்கள் தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளனர்.