2026 ஐசிசி யு-19 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் சிக்ஸ் சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில், டாஸ் நிகழ்வின் போது இரு நாட்டு கேப்டன்களும் கைகுலுக்கிக் கொள்ளாதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஜிம்பாப்வேயின் புலவாயோ நகரில் நடைபெற்ற இந்த முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில், இந்திய கேப்டன் ஆயுஷ் மத்ரே மற்றும் பாகிஸ்தான் கேப்டன் ஃபர்ஹான் யூசுப் ஆகியோர் டாஸ் நடைமுறைகளை முடித்த பிறகு, வழக்கமாகச் செய்யப்படும் கைகுலுக்கலைத் தவிர்த்தனர்.

“>

இது தற்செயலாக நடந்த ஒன்றல்ல என்றும், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் அரசியல் பதற்றங்கள் காரணமாக எடுக்கப்பட்ட திட்டமிட்ட முடிவு என்றும் கூறப்படுகிறது. இந்த “கை குலுக்காத” கலாச்சாரம் கடந்த 2025-ஆம் ஆண்டு ஆசியக் கோப்பையில் இந்திய சீனியர் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தான் கேப்டனுடன் கைகுலுக்க மறுத்ததில் இருந்து தொடங்கியது.

அதன் தொடர்ச்சியாக இந்திய மகளிர் அணி மற்றும் இந்தியா ‘ஏ’ அணிகளும் இதே நடைமுறையைப் பின்பற்றி வந்த நிலையில், தற்போது யு-19 இளம் வீரர்களும் அதையே கடைபிடித்துள்ளனர். களத்தில் விளையாட்டிற்கு அப்பாற்பட்டு நிலவும் இந்த இறுக்கமான சூழல், சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்களிடையே விவாதத்தை கிளப்பியுள்ளது. இப்போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.