2026-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியில் வங்கதேச அணி பங்கேற்கத் தவறியது துரதிர்ஷ்டவசமானது என்றும், அந்த வாய்ப்பை நழுவவிட்டது நாட்டுக்கும் ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது என்றும் வங்கதேசத்தின் முன்னாள் பந்துவீச்சாளர் முகமது ரஃபீக் தெரிவித்துள்ளார்.
அதாவது இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான சூழல் குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) பாதுகாப்பு தொடர்பான கவலைகளை எழுப்பியது. குறிப்பாக, வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஐபிஎல் தொடரிலிருந்து விடுவிக்கப்பட்ட விவகாரம் மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான அரசியல் சூழல் காரணமாக, இந்தியா சென்று விளையாட வங்கதேசம் மறுத்தது. ஐசிசி அமைப்பிடம் தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்றக்கோரியது.
ஆனால், ஐசிசி இதனை ஏற்க மறுத்த நிலையில், பாதுகாப்பு காரணங்களைக் கூறி வங்கதேசம் உலகக் கோப்பையிலிருந்து விலகியது. அதனைத் தொடர்ந்து, அந்த அணிக்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணியை ஐசிசி சேர்த்தது. இது குறித்து ‘மை-கேல்’ (MyKhel) தளத்திற்கு முகமது ரஃபீக் அளித்த பிரத்யேகப் பேட்டியில் கூறியிருப்பதாவது, “உலகக் கோப்பையில் விளையாட முடியாமல் போனது குறித்து ஒவ்வொருவரும் வருத்தப்படுகிறார்கள்.
வீரர்கள் விளையாடத் தயாராக இருந்தனர், ஆனால் நிர்வாகம் அவர்களைத் தடுத்துவிட்டது. அந்த நேரத்தில் வாரியமும், நிர்வாகமும் எடுத்த முடிவு தவறானது என்பதை வருங்காலத்தில் அவர்கள் உணர்வார்கள். இது வங்கதேச அணிக்குக் கிடைத்த துரதிர்ஷ்டவசமான வாய்ப்பு இழப்பு.” தொடர்ந்து இந்திய அணியின் செயல்பாடு குறித்துப் பேசிய ரஃபீக், “இந்தியா தொடக்கம் முதலே கோப்பையை வெல்லும் தகுதியுடன் இருந்தது. அந்த அணி வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய அணியில் 8 முதல் 9 தரமான பேட்டர்கள் உள்ளனர். ஒருவரது பங்களிப்பை மட்டும் சொல்ல முடியாது, அணியின் ஒட்டுமொத்த முயற்சியே அவர்களுக்கு இந்த வெற்றியைத் தேடித்தந்துவிட்டது,” என்று பாராட்டினார்.
இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு இடையேயான கிரிக்கெட் உறவு குறித்துக் குறிப்பிட்ட அவர், “நாடுகளுக்கு இடையேயான அரசியல் சிக்கல்கள் இப்போது முடிந்துவிட்டன. நாங்கள் அனைவரும் சகோதரர்கள், எங்களுக்குக் கிரிக்கெட் மீது மிகுந்த அன்பு உள்ளது. நீண்ட காலத்திற்கு இரு நாடுகளும் விலகி இருக்க முடியாது. மேலும் அரசியல் சிக்கல்களைத் தாண்டி, விளையாட்டு என்பது புனிதமானது. எனவே, இந்தியா வங்கதேசத்திற்கு வந்து விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பம். விளையாட்டு எப்போதும் அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்,” என்று உருக்கமாகத் தெரிவித்தார்.
