அமெரிக்காவின் 50% வரிவிதிப்பு காரணமாக, திருப்பூர் பின்னலாடைத் தொழில்துறைக்கு ஏற்பட்ட பாதிப்பை கண்டித்து, மத்திய அரசை விலக்க வலியுறுத்தும் வகையில் திமுக கூட்டணி சார்பில் திருப்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்பி ஆ.ராசா கலந்துகொண்டு பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவுடன் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து கலந்துகொண்டன. வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் முக்கிய உரையாற்றினர்.
இந்நிலையில், ஆ.ராசா தனது உரையில் கூறியதாவது:
இந்தியாவின் தொழில்துறையை வீழ்த்தும் வகையில் அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது. இந்த வரியை டிரம்ப் விதிக்கவில்லை, அதை விதிக்கச் சொன்னது மோடியே என்றார். இது சாதாரண வரி இல்லை, நம் தேசத்தின் மீது நடத்தப்படும் பொருளாதாரப் போர்.
பாகிஸ்தானின் தாக்குதல் குறித்து அமெரிக்கா இந்தியாவுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்ததாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். ஆனால், பாகிஸ்தான் தாக்கத் தயாராக இருக்கிறது என்பதை அமெரிக்கா சொன்ன பிறகு தான் நாம் விழித்தெழுகிறோமே என்ற கேள்வி எழுகிறது.
இவ்வாறான சூழலில் டிரம்ப் “இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போரை நான் தான் நிறுத்தினேன்” என்று சொன்னார். அது உண்மைதான் என்றோ, பொய்தான் என்றோ மோடி இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. இதனையே தொடர்ந்து அவர், “மோடியும் அமித் ஷாவும் இந்தியாவை விற்று விட்டார்கள்; அம்பானியும் அதானியும் இந்தியாவை வாங்கி விட்டார்கள். இதன் நீட்சியே அமெரிக்காவின் வரிவிதிப்பு” என்றார்.
மேலும், அமெரிக்காவின் முன்னாள் வாணிபத் துறை செயலாளர் பீட்டர் நவ்ரோ, தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “உக்ரைனில் நடப்பது மோடி போர்; இந்தியாவில் நடப்பது பிரமாணிய சுரண்டல்” என குறிப்பிட்டதாகவும் ராசா தெரிவித்துள்ளார்.
